வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வகையில் வங்கக்கடலில் ஏற்கனவே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திர நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகிற 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.