உத்திர பிரதேச மாநிலத்தில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி, குழந்தை பிறந்து 14வது நாளில் பணிக்குத் திரும்பியுள்ளார். அவரது அர்ப்பணிப்பைப் பலரும் பாராட்டுகின்றனர். உத்திர பிரதேச மாநிலம், காஸியாபாத் மாவட்டத்திலுள்ள மோடி நகரில் சப் டிவிஷனல் மாஜிஸ்டிரேட்டாக பணியாற்றுபவர் சௌம்யா பாண்டே. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக விடுப்பு எடுத்துள்ளார். பொதுவாக ஆறு மாதங்கள் பெரும்பாலானோர் பிரசவ விடுப்பு எடுக்கும் நிலையில் 22 நாள்களில், அதாவது குழந்தை பிறந்து 14வது நாளே சௌம்யா பாண்டே, கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரைக்கும் காஸியாபாத்தின் கோவிட் பணிக்கான முதன்மை அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டிருந்தார். செப்டம்பர் மாதம் 22 நாள்கள் விடுப்பு எடுத்திருந்தார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில் இரு வாரங்கள் கழித்து கையில் குழந்தையுடன் சௌம்யா பணிக்குத் திரும்பியுள்ளார்.
"நான் ஐஏஎஸ் அதிகாரி. ஆகவே என் வேலையைக் கவனிக்கவேண்டும். கோவிட்-19 காரணமாக அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்குமான வலிமையைக் கடவுள் பெண்களுக்குக் கொடுத்துள்ளார். இந்தியாவின் கிராமப்புறங்களில் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவம் நெருங்கும் வரைக்கும் வீட்டுவேலைகளையும் வாழ்வாதார பணிகளையும் செய்து வருகின்றனர். பேறுகாலத்திற்குப் பின்பு குழந்தையையும் வீட்டுப் பொறுப்பையும் கவனிக்கின்றனர். அதேபோன்று கடவுளின் அருளால் நான் என் மூன்று வார மகளோடு ஆட்டுப்பணியையும் கவனிக்க முடிகிறது. என்னுடைய குடும்பத்தினர் எனக்கு அதிக உதவி செய்கின்றனர். என்னுடைய தாலுகா பகுதியில் உள்ளவர்களும் மற்றும் காஸியாபாத் மாவட்ட நிர்வாகத்தினரும் குடும்பத்தினரைப் போன்று எனக்கு ஆதரவளிக்கின்றனர். கோவிட்-19 காலத்தில் வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் உரிய முன்னெச்சரிக்கைகளைக் கண்டிப்பாகக் கைக்கொள்ளவேண்டும்" என்று சௌம்யா பாண்டே கூறியுள்ளார்.