கேரளாவைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட கொரோனா என்ற இளம்பெண்ணுக்கு நேற்று கொல்லம் மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் இப்போது கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த தாமஸ் என்பவருக்கு கொரோனா என்பது அதிர்ஷ்ட வார்த்தையாக உள்ளது. ஓவியக் கலைஞரான தாமசுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது பெயர்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என எண்ணிய தாமஸ், மூத்த பெண்ணுக்கு கொரோனா என்றும், இளைய மகளுக்குக் கோரல் என்றும் பெயரிட்டார். கொரோனா என்றால் அதற்கு அர்த்தம் ஒளிவட்டம் என்று தாமஸ் சொல்கிறார்.
இந்நிலையில் தாமஸ் தனது மூத்த மகள் கொரோனாவுக்கு கடந்த வருடம் திருமணம் செய்து வைத்தார். இவரது கணவர் ஜினு துபாயில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பின்னர் வேலைக்காக அவர் துபாய் சென்றுவிட்டார். இந்நிலையில் கர்ப்பிணியான கொரோனா கடந்த மாதம் வழக்கமான பரிசோதனைக்காகக் கொல்லத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கர்ப்பிணியான கொரோனாவுக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கொரோனாவை கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறினர். இதனால் அவர் கொல்லம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கொரோனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாகக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏதுமில்லை. தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா என்ற வார்த்தை அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றபோதிலும், தனக்கு இது ஐஸ்வர்யம் கொண்டு வரும் பெயர் என்று தாமஸ் கூறுகிறார். அந்த ஐஸ்வர்யத்திற்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தாமஸ் குடும்பத்தினர் உள்ளனர்.