இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு வணிக நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை அறிவித்திருக்கும் சமயத்தில் ஐசிஐசிஐ வங்கியின் இணையவழி பரிவர்த்தனையில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அமேசான் நிறுவனம், 'கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்' என்ற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த விற்பனை தொடங்கி விட்டது. ஏனைய வாடிக்கையாளர்களுக்கு சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது. அதேபோன்று ஃபிளிப்கார்ட் நிறுவனம் 'பிக் பில்லியன் டேஸ்' என்ற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.
இன்று இந்தியாவில் பல்வேறு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் இணையவழி பரிவர்த்தனையை செய்ய இயலவில்லை. நெட்பேங்கிங், டெபிட் கார்டு மற்றும் யூபிஐ உள்ளிட்ட எதன் மூலமும் பரிவர்த்தனை செய்ய இயலாததால் இந்தியாவிலுள்ள பல ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பலருக்கு பரிவர்த்தனை செய்ய இயலவில்லை; இன்னும் சிலருக்கு ஓடிபி என்னும் ரகசிய குறியீட்டெண் கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் அநேகர் பயன்படுத்தியதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டதா? வேறு ஏதேனும் காரணங்களால் ஏற்பட்டதா என்பது குறித்த சரியான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.