தனிஷ்க் ஜுவல்லரியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வாபஸ் பெறப்பட்ட பின்பு, நகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதாக விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, தங்க நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் குஜராத் மாநிலம், குட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து இளம் பெண், முஸ்லிம் குடும்பத்தில் மருமகளாகி இருக்கிறார். அந்த பெண்ணை மாமியார் வளைகாப்புக்கு அழைத்து வருவது போல் காட்சியும், வசனமும் அமைக்கப்பட்டிருந்தது.இதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், சமூக ஊடகங்களில் இந்த விளம்பரத்திற்கு எதிராகவும், தனிஷ்க் நிறுவனத்திற்கு எதிராகவும் கடுமையான பதிவுகள் வெளியாயின. அதே சமயம், இந்தியாவின் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த விளம்பரம் உள்ளதாக ஆதரவு குரல்களும் ஒலித்தன. பலத்த எதிர்ப்புக்கிடையே விளம்பரத்தை வாபஸ் பெறுவதாக தனிஷ்க் நிறுவனம் அறிவித்தது. எனினும், குட்ச் மாவட்டத்தில் காந்திதாம் பகுதியில் உள்ள தனிஷ்க் கடைக்குள் நேற்றிரவு மர்மக் கும்பல் நுழைந்து, அங்கிருந்த மேலாளரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியிருக்கிறது. இதன்பின், மர்மக் கும்பல் கடையைக் கடுமையாகத் தாக்கி விட்டுச் சென்றது.
இந்த சூழ்நிலையில், தனிஷ்க் வாபஸ் பெற்ற விளம்பரம், சமூக ஊடகங்களில் இன்னும் பரவி வருவதாகவும் அதற்கு ஆதரவாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கருத்துகள் பதிவிடப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும், தனிஷ்க் கடையில் நகைகள் விற்பனை முன்பை விட அமோகமாக நடப்பதாகச் சர்ச்சைக்குரிய அந்த விளம்பரத்தைத் தயாரித்த விளம்பர நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் அமித்து அகாலி கூறுகையில், தனிஷ்க் நிறுவனத்தின் 55 வினாடி விளம்பரத்தை வாபஸ் பெற்றது அந்த நிறுவனத்தின் துணிவையே காட்டுகிறது. ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம் என்ற அதன் கொள்கை பாராட்டத்தக்கது. அந்த விளம்பரம் வாபஸ் பெறப்பட்டாலும், அதற்கு பின்புதான் அந்த கடைக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. அந்த கடையில்தான் நகைகள் வாங்க வேண்டுமென்று பலர் முடிவெடுத்து வாங்குவதால் அமோக விற்பனை நடக்கிறது என்றார்.