தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படாவிட்டாலும், குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தினமும் புதிதாகத் தொற்று பாதிப்பவர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்கள் கொரோனா பரவல் அதிகமாகக் காணப்பட்டது.பின்னர் தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. நேற்று 3094 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது.
மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 94,030 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4403 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 46,555 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 50 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,741 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 36,734 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் நேற்று புதிதாக 857 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 191 பேர், திருவள்ளூர் 137, கோவையில் 263, சேலம் 169, திருப்பூர் மாவட்டத்தில் 125 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 91,754 பேருக்கும், செங்கல்பட்டில் 41,645 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36,307 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 91 லட்சம் பேருக்கு கொரேோன பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 80 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ததில் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.