பிரதமர் பேச்சுக்கு பாஜக யூ டியூப்பில் 4 ஆயிரத்து 500 டிஸ்லைக் வரவே, அந்த பட்டனை பாஜக ஆப் செய்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று(அக்.20) மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசுகையில், ஊரடங்கு முடிந்து பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. கொரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதேசமயம், குணமடைவோர் விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக செல்லவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும். கொரோனா சிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. நாடு முழுவதும் பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், பல லட்சம் சிகிச்சை மையங்களும் உள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
பிரதமர் மோடியின் பேச்சை பாஜக தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலை செய்தது. அப்போது, பிரதமர் பேசத் தொடங்கியதும் நூற்றுக்கணக்கானோர் டிஸ்லைக் பதிவிட்டனர். சில வினாடிகளில் இது 4500ஐ தாண்டியது. உடனே சுதாரித்து கொண்ட பாஜக, அதில் லைக், டிஸ்லைக் பட்டன்களை ஆப் செய்து விட்டது. பணமதிப்பிழப்பு உள்பட பிரதமரின் பேச்சுகள் பலவும் மக்களிடம் எதிர்ப்பையே ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.