சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறந்திருந்த 5 நாட்களில் 673 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் குறிப்பிடத்தக்கதாகும். திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு அடுத்தபடியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தான் அதிக அளவில் பக்தர்கள் செல்கின்றனர். குறிப்பாக மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரள்வார்கள். இதேபோல ஒவ்வொரு மலையாள மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களிலும் பெருமளவு பக்தர்கள் வருவார்கள். மேலும் ஓணம் பண்டிகை, சித்திரை விஷு, பங்குனி உத்திரம் உள்பட விசேஷ நாட்களிலும் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஊரடங்கு சட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் ஐப்பசி மாத பூஜைகளின் போது சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 250 பேரை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 5 நாட்களில் 1,250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 5 நாட்களிலும் சேர்த்து மொத்தம் 673 பக்தர்கள் மட்டுமே சபரிமலை வந்ததாக முதல்வர் பினராயி விஜயன் இன்று கூறினார். திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியது: சபரிமலையில் தரிசனத்திற்கு 5 நாட்களில் மொத்தம் 1,250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் சபரிமலையில் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. முதல் நாளில் 146 பேரும், 2வது நாளில் 164 பேரும், 3வது நாளில் 152 பேரும், 4வது நாளில் 122 பேரும், 5வது நாளில் 89 பேரும் என மொத்தம் 673 பக்தர்கள் மட்டுமே வந்திருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.