பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திர போன்ற வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களில் மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் விளைச்சல் பாதிக்கப்படும் போது, தட்டுப்பாடு ஏற்படுவதுண்டு. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120 வரை சென்றது. அதன்பிறகு, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த எகிப்து வெங்காயத்தை அமைச்சர் செல்லூர் ராஜு, ஈஜிபுத்து வெங்காயம் என்று சொன்னது கூட பெரிய காமெடியாக மாறியது.
இந்த ஆண்டும் கடந்த ஆகஸ்ட் முதல் வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தற்போது மும்பையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100ஐத் தாண்டி விட்டது. தமிழக்திலும் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. மேலும், கறுப்பு பூஞ்சை படர்ந்த தரமற்ற வெங்காயங்களே கிடைக்கின்றன.
இந்நிலையில், மத்திய அரசு தனது சேமிப்பில் உள்ள வெங்காயத்தை மாநிலங்களுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பண்டிகைக் காலம் என்பதால், சேமிப்பில் உள்ள வெங்காயத்தை மாநிலங்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2003ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வெங்காய இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. எனவே, வெங்காய விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை கட்டுப்பாடின்றி வெங்காயம் இறக்குமதி செய்யலாம் என்று தெரிவித்தார்.