காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து.. பரூக் அப்துல்லா, முப்தி ஆலோசனை

Kashmir leaders meeting at Mehbooba Mufti residence in Srinagar.

by எஸ். எம். கணபதி, Oct 24, 2020, 16:04 PM IST

காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து கொண்டு வருவதற்காகப் போராடுவது குறித்து அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

இதன்பின்னர், பல மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு தலைவராக விடுதலை செய்யப்பட்டனர். கடைசியாக, 14 மாத சிறைவாசம் அனுபவித்த மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார். தமிழகத்தில் அதிமுக, திமுக போல், காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருந்தன. தற்போது தே.மா.கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ம.ஜ.க. தலைவர் மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து, மத்திய அரசை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம், குப்காரில் உள்ள பரூக் அப்துல்லாவின் வீட்டில் அவர்கள் கூட்டம் போட்டு ஆலோசித்தனர்.

அதன்பின், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் காஷ்மீர் மக்களின் பழைய உரிமைகளை மீட்டெடுப்பது என்றும் தீர்மானித்தனர். இதற்கு குப்கர் பிரகடனம் என்று பெயரிட்டு, தங்கள் அணியை குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்று பெயரிட்டனர்.இதைத் தொடர்ந்து, பரூக் அப்துல்லா மீதுள்ள பழைய கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் அவரிடம் 4 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 நாட்கள் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று மெகபூபா முப்தி விமர்சித்தார்.

மேலும், காஷ்மீர் கொடியை ஏற்றும் வரை நான் தேசியக் கொடியை ஏற்ற மாட்டேன் என்று அவர் நிருபர்களிடம் கூறினார். இதையடுத்து, அவர் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகக் கூறி, அவரை கைது செய்ய அரசுக்கு பாஜக கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் மெகபூபா முப்தி வீட்டில் இன்று மீண்டும் குப்கர் பிரகடன கூட்டணி கூட்டம் நடைபெற்றது.

இதில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், மக்கள் மாநாட்டுக் கட்சி, அவாமி தேசிய காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து உரிமைகளைப் பெறுவதற்கு அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது மற்றும் கொள்கைகளை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

You'r reading காஷ்மீருக்கு மீண்டும் விசேஷ அந்தஸ்து.. பரூக் அப்துல்லா, முப்தி ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை