கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் 5வது கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் நவம்பர் இறுதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மே மாத இறுதிவரை நீடித்தது. அன்லாக் 1 கொண்டுவரப்பட்ட ஜூன் முதல் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் பின்னர் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அன்லாக் 5 தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், அரங்கங்கள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.மூடப்பட்ட அரங்கங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ஆட்களை அனுமதிக்கவும், (அதிகபட்சமாக 200 பேர்) குறிப்பிட்ட வெளிநாட்டு விமான பயணத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி வரை இந்த தளர்வுகள் அமலில் இருக்கும் என்றும், அதன்பிறகு அன்லாக் 6ல் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் அப்போது கூறப்பட்டது.
கடந்த சில தினங்களாக நோய் பரவல் இந்தியாவில் குறைந்து வருவதால் அடுத்த மாதம் முதல் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்லாக் 5 நவம்பர் இறுதி வரை தொடரும் என்று தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து முக்கிய துறைகளும் கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றிச் செயல்படுகிறது என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் தான் லாக்டவுன் தொடர்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.