சமீபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சனாதன தர்மம் குறித்து பேசியவர், ``சனாதன கொள்கைகளில், பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு" என்று பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு பாஜக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே, ``எனது பேச்சை திரித்து, பொய்யைப் பரப்புகிறது ஒரு கும்பல். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது அவதூறு பரப்புகிறார்கள். காலங்காலமாக பெண்களை இழிவுபடுத்துவது மனுதர்மம் என்னும் சனாதனமே" என்று விளக்கம் கொடுத்தார். இதன்பின் இந்த பிரச்னை ஓயவில்லை. குறிப்பாக, பாஜகவில் புதிதாக கட்சியில் இணைந்த குஷ்பூ இந்த விவகாரத்தில் திருமாவளவன் மீது கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளார்.
முதல்நாளே காட்டமாக பேட்டி கொடுத்த குஷ்பூ, இன்று திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றார். ஆனால், இடையிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். சிறிது நேரத்தில் விடுதலை செய்யப்பட்டாலும், செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்தவர், ``தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார். பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார். மதிக்காத இடத்தில் கடவுள் இருக்க மாட்டார் என்று மனு தர்மத்தில் கூறியிருப்பது மட்டும் திருமாவளவனுக்கு தெரியவில்லை. 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தகம் மனு. அது குறித்து இப்போது பேசுவது ஏன்?. அதற்கான அவசியம் ஏன்? இதுவரை திருமாவளவனை அண்ணன் என்று தான் பேசி வந்தோம். ஆனால் பெண்கள் குறித்து அவமரியாதையாக பேசிய பின் இனி அண்ணன் என்ற மரியாதை கொடுக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, கட்சியில் இணைந்த உடன் குஷ்பூ திருமாவளவனை எதிர்த்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. பாஜகவால், திருமாவளவனுக்கு எதிராக குஷ்பூ கொம்பு சீவப்படுகிறார் என்று டுவிட்டரில் நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.