பாகிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதர் பதவிக்கு இந்திய வெளியுறவுத்துறை சேவை அதிகாரியான சுரேஷ் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பணியாற்றி வந்தக் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சிலர் இங்கு உளவு பார்த்து வந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் இது கண்டுபிடிக்கப்பட்டதும் இரு நாடுகளும் தங்கள் தூதரகத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது.
அப்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த கவுரவ் அலுவாலியா என்பவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியானது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமாக இருந்த நிலையில் இந்த விவகாரத்தால் விரிசல் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக ஜெயந்த் கோபிரகேட் என்பவரின் பெயரை இந்திய வெளியுறவுத்துறை பரிந்துரைத்திருந்தது. ஆனால் அவருக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.இதையடுத்து ஐ.எஃப்.எஸ் அதிகாரியான சுரேஷ் குமார் என்பவரின் பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளது.கடந்த 2006ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற சுரேஷ் குமார் மத்திய வெளியுறவுத்துறையில் பாகிஸ்தான் பிரிவின் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.இவரைத் தூதராக ஏற்று விசா வழங்கப் பாகிஸ்தான் அரசு முன்வருமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.