மகாராஷ்டிராவில் இருந்து ₹16 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்துடன் புறப்பட்ட லாரிக்கு என்ன ஆச்சு?

by Nishanth, Oct 30, 2020, 18:23 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து ₹16 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்துடன் கேரளாவுக்குப் புறப்பட்ட லாரி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாரி வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை விண்ணை முட்டி விட்டது. பெரிய வெங்காயம் 100 ரூபாயைத் தாண்டியும், சின்ன வெங்காயம் 130 ரூபாயைத் தாண்டியும் விற்பனையாகி வருகிறது. வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பல பகுதிகளில் வெங்காய மூட்டைகள் திருடப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 25 டன் வெங்காயத்துடன் புறப்பட்ட லாரி மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த வெங்காய மொத்த வியாபாரியான முகமது ஸியாத் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 25 டன் வெங்காயம் கொண்டுவர ஆர்டர் செய்திருந்தார். கடந்த 25ம் தேதி 25 டன் பெரிய வெங்காயத்துடன் மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரிலிருந்து ஒரு லாரி புறப்பட்டது. வழக்கமாக மகாராஷ்டிராவிலிருந்து லாரி புறப்பட்டால் மூன்றாவது நாளில் கொச்சியை அடைந்துவிடும். ஆனால் 5 நாள் ஆகியும் அந்த லாரி கொச்சிக்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த முகமது ஸியாத் லாரி டிரைவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். லாரி டிரைவரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர். அந்த லாரியை யாராவது கடத்திச் சென்றார்களா, அல்லது லாரி டிரைவர் வேறு யாருக்காவது வெங்காயத்தை விற்பனை செய்து விட்டாரா என்பது தெரியவில்லை. மாயமான பல்லாரி வெங்காயத்தின் மதிப்பு ₹16 லட்சம் ஆகும்.

You'r reading மகாராஷ்டிராவில் இருந்து ₹16 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்துடன் புறப்பட்ட லாரிக்கு என்ன ஆச்சு? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை