வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த இரண்டு காட்டுப்பன்றிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது காராச்சுண்டு கிராமம். இது வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமமாகும். இதனால் அடிக்கடி காட்டுப் பன்றிகள், யானைகள் உள்பட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம்.
இதனால் இந்த கிராமத்தினர் எப்போதும் வெளியிடங்களில் பீதியுடனேயே நடமாடி வந்தனர். இரவில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வது கிடையாது. வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை இந்த கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரது வீட்டுக்குள் இரண்டு காட்டுப் பன்றிகள் திடீரென நுழைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மோகனின் குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். வீட்டுக்குள் புகுந்த அந்த காட்டுப் பன்றிகள் வீட்டிலிருந்த படுக்கை, டிவி மற்றும் பொருட்களை நாசப்படுத்தியது. இதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அப்பகுதியினர் கூறினர்.இதையடுத்து பன்றிகளைச் சுட்டுக்கொல்ல வனத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த துப்பாக்கி லைசன்ஸ் வைத்திருந்த ஒருவர் ஒரு பன்றியைச் சுட்டுக் கொன்றார். இதன் பின்னர் வனத்துறையினர் இரண்டாவது பன்றியைச் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.