பட்டாசு விற்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. ராஜஸ்தான் அரசு அறிவிப்பு.. சிவகாசி பட்டாசு தொழில் பாதிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 4, 2020, 09:48 AM IST

ராஜஸ்தானில் பட்டாசுகளை விற்றால் ரூ.10 ஆயிரமும், பட்டாசு கொளுத்தினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக கட்ட வேண்டும். இந்தியாவில் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். அதனால் தீபாவளி சீசனில் பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும். தமிழகத்தின் சிவகாசியில்தான் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசு விற்பனையாகி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவில் இருந்து திருட்டுத்தனமாகப் பட்டாசுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்றதால், சிவகாசி பட்டாசு தொழிலில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

அவர்களின் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சீனப் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பாதிப்பால் பட்டாசு விற்பனை சரிந்து விட்டது. டெல்லி உள்பட வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்திருப்பதாலும் பட்டாசு விற்பனை குறைந்துள்ளது. நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, கொரோனாவை காரணம் காட்டி, பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது. கொரோனா நோயாளிகளுக்கு பட்டாசு புகையால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், தொற்று பரவும் காலத்தில் எல்லோருக்குமே புகைமூட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து அம்மாநில அரசு ஒரு நோட்டிபிகேஷன் வெளியிட்டுள்ளது. இதில், பட்டாசு விற்கும் கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பட்டாசு கொளுத்துபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பட்டாசு விற்பனையை தடை செய்தும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், பட்டாசு கொளுத்த தடை விதிப்பது மத்திய அரசு பதிலளிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு சிவகாசி பட்டாசு விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள அதிபர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading பட்டாசு விற்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. ராஜஸ்தான் அரசு அறிவிப்பு.. சிவகாசி பட்டாசு தொழில் பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை