கவர்னர் புரோகித் திடீர் டெல்லி பயணம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 4, 2020, 10:04 AM IST

கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(நவ.4) டெல்லிக்கு சென்றுள்ளார். முன்னதாக, அவரை பாஜக மாநில தலைவர் முருகன் சந்தித்து விட்டு சென்றுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலையில் திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வரும் 6ம் தேதி வரை தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் நிச்சயமாக தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், பாஜகவின் தேர்தல் உத்திகள் குறித்தும் நிச்சயமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. கவர்னர் டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக, அவரை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசினார். மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிக்க அவர் சென்றதாக கூறப்பட்டது.

ஆனால், பாஜகவை பொறுத்தவரை இடஒதுக்கீடு பிரச்னையில் திராவிடக் கட்சிகளை போல் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்பது தெரிந்த விஷயம்தான். எனவே, நிச்சயமாக அரசியல் விவகாரமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. பாஜகவினர் வரும் 6ம் தேதி முதல் வேல்யாத்திரை என்ற பெயரில் தேர்தல் பிரச்சார யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளனர். மதத்தின் பெயரால் இந்த யாத்திரையை நடத்தி, கலவரம் ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழகத்தை வன்முறைக்காடாக மாற்ற யார் முயற்சித்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். இது போன்ற அரசியல் சூழலில் கவர்னரின் பயணமும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

You'r reading கவர்னர் புரோகித் திடீர் டெல்லி பயணம்.. தமிழக அரசியலில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை