மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. இதன்பின், சிவசேனா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். இந்நிலையில், பாஜகவுக்கு தீவிரமாக ஆதரவு தெரிவிக்கும் ரிபப்ளிக் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் மற்றும் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி, மகாராஷ்டிர அரசை கடுமையாக விமர்சித்தார். எப்போதுமே பாஜகவைத் தவிர மற்ற கட்சியினரை மிகவும் மட்டமாக விமர்சித்து அந்த டி.வி. செய்திகளை வெளியிடுவது வழக்கம். இதனால், உத்தவ் தாக்கரே அரசுக்கும், ரிபப்ளிக் டி.வி.க்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதற்கிடையே, டி.ஆர்.பி ரேட்டிங்கில் ரிபப்ளிக் டிவி முறைகேடு செய்ததாக கடந்த மாதம் அந்த டி.வி. வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் இருக்கும் போதும் ரிபப்பளிக் டி.வி.யில் உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த சூழலில், அர்னாப் கோஸ்வாமியை மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2018ம் ஆண்டில் கன்கார்டே டிசைன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி, ரிபப்ளிக் டி.வி. கம்பெனிக்கு இன்டீரியர் வேலைகளை செய்து கொடுத்திருக்கிறது. இதற்கு கட்டணமாக 5 கோடியே 40 லட்சம் தராமல், அர்னாப் கோஸ்வாமி மோசடி செய்து விட்டதாக கான்கார்டே டிசைன்ஸ் உரிமையாளர் அன்வாய் நாயக் குற்றம்சாட்டியிருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் அவரும், அவரது தாயார் குமுத் நாயக்கும் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது தனது தற்கொலைக்கு அர்னாப் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 2018ம் ஆண்டிலேயே மும்பை அலிபாக் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், அந்த வழக்கு 2019ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. ஆனால், தனது தந்தை மரணத்தில் சரியான விசாரணை நடைபெறவில்லை என்று கூறி, அன்வாய் நாயக்கின் மகள் அட்நயா நாயக், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் புகார் கொடுத்தார். இதனடிப்படையில், சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில்தான் தற்போது அர்னாப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.