கடந்த ஒன்றரை வருடமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் நடிகர் சிம்பு. பின்னர் ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் நடித்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் மாநாடு படமும் நின்றது. கொரோனா ஊரடங்கு தளர்வில் தனது உடல் எடையை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் சிம்பு. அதற்கு நல்லபலன் கிடைத்தது. உடல் குறைப்பதற்காக அவர் உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டார். தினமும் 5 பிரியாணி சாப்பிட்டு வந்த சிம்பு உடல் எடையை குறைப்பதற்காக பிரியாணி சாப்பிடுவதை நிறுத்தினார். புதிய படங்களில் நடிக்க ஸ்கிரிப்ட் கேட்டு வந்த சிம்பு இயக்குனர் சுசீந்திரன் சொன்ன கிராமத்து பின்னணியிலான ஸ்கிரிப்ட் மிகவும் பிடிக்கவே நடிக்க ஒப்புக் கொண்டார்.
உடனடியாக படப்பிடிப்பு வேலைகள் தொடங்கின. திண்டுக்கல் பகுதியில் உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டார். படத்திற்கு ஈஸ்வரன் என பெயரிட்டிருக்கிறது. வயலில் நிற்கும் சிம்பு நாகப் பாம்பை கையில் பிடித்தபடி அளித்திருக்கும் போஸ் ஒரு நிமிடம் ரசிகர்களை திணற வைத்தது. இப்படம் பொங்கல் தினத்தில் வரும் என இயக்குனர் அறிவித்திருக்கிறார். சிம்பு நடிப்பில் மிக குறைந்த நாளில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாம்பு பிடிப்பதுபோல் சிம்பு நடித்த காட்சி தற்போது வம்பாக முடிந்திருக்கிறது. அதற்கான காட்சிகள் லீக் ஆகி உள்ளது.
காட்டு பகுதியில் இரண்டு பேர்களுடன் பாம்பு பிடிக்கச் செல்லும் சிம்பு மரத்தின் மீதிருக்கும் பாம்பை பிடித்து அதை சாக்கு பையில் போடும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அதைக் கண்ட விலங்கு ஆர்வலர்கள் சிலர், வனவிலங்கு சட்டப்படி விலங்குகளை துன்புறுத்தக் கூடாது ஆனால் சிம்பு பாம்பு ஒன்றை பிடித்து அதற்கு தொல்லை கொடுத்திருப்பதாக வனவிலங்கு துறையில் புகார் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஈஸ்வரன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது. இதையடுத்து மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சிம்பு.