கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி...!

by Nishanth, Nov 5, 2020, 18:33 PM IST

கேரளாவில் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜலந்தர் பிஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கத்தோலிக்க சபை பிஷப்பாக இருப்பவர் பிராங்கோ. கேரளாவைச் சேர்ந்த இவர், அடிக்கடி சொந்த மாநிலத்திற்குச் செல்வது உண்டு.

கேரளாவில் உள்ள கத்தோலிக்க சபைகளில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களில் இவர் கலந்து கொள்வார். இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கோட்டயம் மாவட்டம் குரவிலங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒரு கன்னியாஸ்திரி, தன்னை பிஷப் பிராங்கோ பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகப் போலீசில் புகார் செய்தார். 2014 முதல் 2016 வரை தன்னை பிஷப் பலாத்காரம் செய்ததாக இவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். கன்னியாஸ்திரியை பிஷப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் புகார் கொடுத்துப் பல மாதங்கள் ஆன பிறகும் போலீசார் பிஷப்புக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ இல்லை. இதையடுத்து போலீசைக் கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வலுத்த பின்னரே போலீசார் பிஷப் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 2018 செப்டம்பர் மாதம் பிஷப் பிராங்கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 40 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு கோட்டயம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிஷப் பிராங்கோ விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றமும் பிஷப் பிராங்கோவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதன் பிறகும் விடாமல் உச்சநீதிமன்ற உத்தரவில் தவறு இருப்பதாகவும், அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரி மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. மேலும் இந்த வழக்கைத் திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று பிஷப் பிராங்கோ கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

You'r reading கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி...! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை