தேசிய பாதுகாப்பு கல்லூரி கருத்தரங்கில் இன்று முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ரவாத் கலந்து கொண்டு பேசினார். அதில், ``இந்தியா வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகரித்துகொண்டே இருக்கிறது.பெருகி வரும் அச்சுறுத்தல் சூழ்நிலையை சமாளிக்க ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தற்சார்பு பெற வேண்டும். ஆயுத தேவைகளை ஈடுகட்ட ஒரே நாட்டையே சார்ந்திருக்கும் நிலையிலிருந்து இந்தியா வெளியே வர வேண்டும்.
லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் அத்துமீறியதற்காக சீன ராணுவத்திற்கு அந்த ராணுவமே எதிர்பார்க்காத பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்தின் பிறப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இரு அணு ஆயுத அண்டை நாடுகளுடனும் (பாகிஸ்தான் மற்றும் சீனா) மோதல் போக்குடன் பிராந்திய ஸ்திரமின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவுடன் போர்களை நடத்திய சீனாவும்--பாகிஸ்தானும் மிகவும் இணக்கமான முறையில் செயல்படுகின்றன.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுடன் கூட்டணி அமைத்து பாதுகாப்பு இராஜதந்திரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை இந்தியா புரிந்துகொள்கிறது. வரும் ஆண்டுகளில், இந்திய பாதுகாப்புத் துறை அதிவேகமாக வளர்ந்து வருவதோடு ஒட்டுமொத்த பாதுகாப்புத் தயாரிப்புக்கும் பங்களிக்கும்" என்று கூறினார்.