நிதிஷ்குமார் தான் முதல்வர்.. எந்த குழப்பமும் இல்லை.. பாஜக அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 11, 2020, 15:17 PM IST

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் நிதிஷ்குமார் தான் முதல்வர் என்று பாஜக அறிவித்துள்ளது.பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது. நள்ளிரவில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பாஜக மொத்தம் 110 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜக 74 தொகுதிகளில் வென்றிருக்கிறது. ஜேடியு 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 தொகுதிகளில் வென்றிருக்கிறது. 11 தொகுதிகளில் போட்டியிட்ட விஐபி கட்சி 4 இடங்களிலும், 7 தொகுதிகளில் போட்டியிட்ட ஹெச்ஏஎம் கட்சி 4 இடங்களிலும் வென்றுள்ளன.

தேர்தலுக்கு முன்பு ஜேடியு - பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சலசலப்பு ஏற்பட்டது. இரு கட்சிகளும் சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், முதல்வர் பதவி பாஜகவுக்குத்தான் என்றும் பாஜகவினர் பேசி வந்தனர். இதற்கு ஜேடியு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து பஞ்சாயத்து பண்ணி, கடைசியில் நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்திருந்தார். அதே சமயம், ஜேடியு 122, பாஜக 121 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எனினும், தற்போது பாஜக 74 தொகுதிகளில் வென்றுள்ளது. ஜேடியு 43 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. இதனால் முதல்வர் பதவியை பாஜக விட்டுத் தராது என்றும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு விட்டுத் தராமல் சண்டை போட்டது போல் கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்றும் பேச்சுகள் அடிபட்டன.

இந்நிலையில், துணை முதல்வரும், பீகார் பாஜக மூத்த தலைவருமான சுசில் மோடி கூறியதாவது:பீகார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். ஜேடியு குறைந்த இடங்களில் வென்றிருந்தாலும், நிதிஷ்குமார் தான் முதல்வராக நீடிப்பார். அவருக்கு அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றும். நாட்டில் வெகு சிலருக்குத்தான் 4வது முறையாக முதல்வராக நீடிக்கும் வாய்ப்பை மக்கள் அளித்துள்ளனர். அந்த வகையில் நிதிஷ்குமாருக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

இவ்வாறு சுசில் மோடி தெரிவித்தார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை