நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கு நாங்கள்தான் காரணம் என்று சிவசேனா கூறியிருக்கிறது.பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது. நள்ளிரவில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பாஜக மொத்தம் 110 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜக 74 தொகுதிகளில் வென்றிருக்கிறது. ஜேடியு 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 தொகுதிகளில் வென்றிருக்கிறது. 11 தொகுதிகளில் போட்டியிட்ட விஐபி கட்சி 4 இடங்களிலும், 7 தொகுதிகளில் போட்டியிட்ட ஹெச்ஏஎம் கட்சி 4 இடங்களிலும் வென்றுள்ளன. பாஜக கூட்டணி 125 இடங்களைப் பிடித்துள்ளது. மகா கூட்டணியில் ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19 மற்றும் இடதுசாரிகள் 16 என்று 110 தொகுதிகளில் வென்றுள்ளன.
இதையடுத்து, பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைகிறது. ஜேடியு வெறும் 43 தொகுதிகளில் வென்றிருந்தாலும் அக்கட்சித் தலைவர் நிதிஷ்குமாரே முதல்வராக நீடிப்பார் என்று பாஜக அறிவித்திருக்கிறது. இது குறித்து, சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியு 50க்கும் குறைவான தொகுதிகளில்தான் வென்றிருக்கிறது. அதே சமயம், பாஜக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருக்கிறது. ஆனாலும், நிதிஷ்குமாருக்கு முதல்வர் பதவி விட்டுத் தரப்படும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார். இதற்குக் காரணமே சிவசேனாதான். மகாராஷ்டிராவில் நாங்கள் உறுதியாக இருந்த காரணத்தால்தான், பாஜக இப்போது நிதிஷ்குமாரை கைவிடாமல் முதல்வர் பதவி தந்திருக்கிறது. எங்களால்தான் நிதிஷ் மீண்டும் முதல்வராகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.இவ்வாறு சிவசேனா கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீட்டின் போது, சிவசேனா 50:50 என்ற விகிதத்தில் சீட் கேட்டது. இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பிறகு, தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் சிவசேனா கேட்டிருக்கிறது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. மேலும், சிவசேனாவுக்கு 122 இடங்களை மட்டும் அளித்து விட்டு, பாஜக 150 இடங்களுக்கு மேல் போட்டியிட்டது.
ஆனால், பாஜக 105 இடங்களில் வென்றதாலும், சிவசேனாவுக்கு வெறும் 56 இடங்களே கிடைத்ததாலும் முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக மறுத்தது. மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) உடைத்து பாஜக ஆட்சி அமைக்க முயன்றது. அது நடக்கவில்லை. மாறாக, காங்கிரஸ்-என்சிபி கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார். இந்த ஆட்சி ஓராண்டாக நீடிக்கிறது.