கணவனுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில் இன்று நடந்தது.கொரோனா பரவலுக்கு இடையேயும் கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்டத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்ட தேர்தல் முடிவடைந்த பின்னர் டிசம்பர் 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கொரோனா நிபந்தனை வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தேர்தல் நடத்தப்படும் என்று கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பாஸ்கரன் தெரிவித்தார். ஓட்டுப் போட வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தில் இப்போதே அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள காரோடு கிராம பஞ்சாயத்தில் உள்ள உச்சக்கடை வார்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராகக் கிரிஜா குமாரி என்பவர் போட்டியிடுகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் பிரசாரத்தைத் தொடங்கினார். இன்று இவர் தனது கணவருடன் அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியிலுள்ள ஒரு காலி இடத்தில் சிலர் மரம் வெட்டிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் வெட்டப்பட்ட ஒரு பெரிய மரம் எதிர்பாராதவிதமாக அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த கிரிஜா குமாரி மீது விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து உச்சக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.