புதுவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்து இருந்தோம். இதற்குப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். அதற்கான கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதாக அவர் கூறுவது சட்டத்திற்குப் புறம்பானது.
இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடுகிறது. புதுச்சேரி மக்களைத் துணைநிலை ஆளுநர் தொடர்ந்து வஞ்சித்துத் தருகிறார்.புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காகக் கொண்டுவரப்படும் எந்த திட்டத்தையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை. அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் மறுதலித்து வருகிறார் .
ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் எங்கள் ஆட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் அவர் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் இது பற்றிக் கண்டுகொள்வதில்லை . கவர்னரின் செயல்பாட்டால் பாதிக்கப்படுவது புதுச்சேரி மாநில மக்கள் தான். இட ஒதுக்கீடு கொடுப்பதன் மூலமாகக் கிராமப்புற ஏழை,எளிய மாணவ மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும் . அதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் . பாரதிய ஜனதா கட்சி அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
இட ஒதுக்கீடு வழங்க உள்துறை செயலாளரைச் சந்தித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் மாணவ மாணவியர் வழக்கு தொடர்ந்தால் அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்.மத்திய அரசு நிதி கொடுக்காத நிலை , துணைநிலை ஆளுநரின் நெருக்கடி இதையெல்லாம் சமாளித்து புதுச்சேரி மாநில மக்கள் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறோம். சட்டம் ஒழுங்கு, சுகாதாரம் ,கல்வி, விவசாயம், மீன்வளத்துறை ஆகியவற்றில் புதுவை மாநிலம் முதலிடத்தில் உள்ளது இதற்காக மத்திய அரசு விருதுகளை வழங்கி உள்ளது என்று நாராயணசாமி தெரிவித்தார்.