நியூசிலாந்துக்கு சென்றுள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா நிபந்தனைகளை மீறி வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் 14 நாள் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது.மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டி20 போட்டிகளும், பின்னர் டெஸ்ட் போட்டிகளும் நடைபெறுகின்றன.
முதல் டி20 நவம்பர் 27ம் தேதியும், இரண்டாவது போட்டி 29ம் தேதியும், மூன்றாவது போட்டி 30ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 11ம் தேதியும் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காகக் கடந்த 12 நாட்களுக்கு முன் மேற்கிந்தியத் தீவு அணி நியூசிலாந்து சென்றது. கொரோனா நிபந்தனைகளின் படி இவர்கள் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும்.
இந்நிலையில் நேற்று கிரைஸ்ட் சர்ச்சில் உள்ள ஹோட்டலில் வீரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உணவு அருந்தினர். வீரர்கள் சமூக அகலத்தையும் கடைப்பிடிக்கவில்லை. இதுகுறித்து நியூசிலாந்து நாட்டின் சுகாதாரத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பரிசோதித்தனர். இதில் மேற்கிந்திய தீவு வீரர்கள் கொரோனா நிபந்தனைகளை மீறியது தெரிய வந்தது.
இதையடுத்து மேலும் 14 நாள் வீரர்கள் அனைவரும் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவு வீரர்களின் இந்த நடவடிக்கையை மேற்கிந்திய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி கிரேவ் கண்டித்துள்ளார். வீரர்களின் தனிமைக்காலம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.