கொரோனா பரவலுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா நோய் பரவலுக்கு இடையே கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 7 மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல கால பூஜைகள் 16ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. புதிய மேல்சாந்திகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயராஜ் போத்தி மற்றும் ரெஜிகுமார் ஆகியோர் பொறுப்பேற்கும் சடங்கு நாளை இரவு 7 மணியளவில் நடைபெறும். கார்த்திகை 1ம் தேதியான நாளை மறுநாள் முதல் இவர்கள் இருவரும் தான் சபரிமலையில் முக்கிய பூஜைகள் அனைத்தையும் நடத்துவார்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த பொறுப்பில் இவர்கள் இருப்பார்கள்.
16ம் தேதி தொடங்கும் மண்டல கால பூஜைகள் டிசம்பர் 26ம் தேதி வரை 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெறும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும். இவ்வருடம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பேரும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் கொண்டு வரவேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை செல்லும் வழியில் பரிசோதனை நடத்த பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.