நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏ உதவியாளர் நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்

by Nishanth, Nov 15, 2020, 09:05 AM IST

பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

பிரபல மலையாள நடிகை 3 வருடங்களுக்கு முன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த நீதிமன்றத்தின் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட நடிகை, அரசுத் தரப்பு மற்றும் போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நாளை (16ம் தேதி) வரை விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான விபின்லால் என்பவர் தன்னுடைய வாக்குமூலத்தை மாற்றக்கோரி தனக்கு மிரட்டல் வருவதாக போலீசில் புகார் செய்திருந்தார். இவர் கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள பேக்கல் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இது தொடர்பாக இவர் பேக்கல் போலீசில் புகார் செய்திருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் விபின்லாலை மிரட்டியது கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ்குமாரின் அலுவலக செயலாளர் பிரதீப் குமார் என தெரியவந்தது. இவர் விபின்லாலை போன் மூலமும், நேரடியாகவும் சென்று மிரட்டியுள்ளார். நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வாக்குமூலத்தை மாற்றினால் வீடு கட்டுவதற்கு பண உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். விபின்லாலை மிரட்டுவதற்காக குற்றாலத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் பெயரில் எடுக்கப்பட்ட சிம்கார்டை பிரதீப்குமார் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி பிரதீப் குமாருக்கு பேக்கல் போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

You'r reading நடிகை பலாத்கார வழக்கு எம்எல்ஏ உதவியாளர் நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை