மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் நடத்துவதை அதிமுக அனுமதிக்காது என்று பாஜகவுக்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டுமென்று பாஜக பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. மத்திய ஆட்சியால் தமிழகத்திற்கு என்ன நன்மை கிடைத்தது என்று சொல்லி, வாக்கு வாங்க முடியாது என்பதை உணர்ந்த பாஜகவினர், இந்து மதத்தின் காப்பாளர்களாக தங்களை காட்டிக் கொண்டு கட்சியை வளர்க்க முயல்கிறார்கள். இதற்காக வேல் யாத்திரை என்ற பெயரில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். ஆனால், அதிமுக அரசு இதற்கு தடை விதித்தது. எனினும், தடையை மீறி தொடர்ந்து யாத்திரை நடத்தப் போவதாக பாஜகவினர் அறிவித்துள்ளனர். அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், வேல்யாத்திரையை தடை செய்தால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் குத்தீட்டி என்பவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்கிறாரே வானதி சீனிவாசன்.. சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது. ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்கள் அன்றி வெறிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண் இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். அது போலவே ஆமென் என்கிற கிறிஸ்தவத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அமைதி கொள், சாந்தமடை என்பதாகும். அது போலேவே இஸ்லாம் என்கிற வார்த்தையும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.
இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது மானுட சமூகத்தின் அமைதியையும், அன்பையும் சாத்வீகத்தையும்தான். இவ்வாறு இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது. இதை வேல்யாத்திரை செல்ல விழைபவர்கள் உணர வேண்டும்.
அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி. இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது. அதிமுக கூட்டணி நீடிக்கும் என்று அமைச்சர் தங்கமணி கடந்த 2 நாள் முன்பாக தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல்கள் நிலவி வருகின்றன. இதனால், கூட்டணி நீடிக்குமா, நீடிக்காது என்ற சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. இதற்கிடையே, வரும் 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னைக்கு வருகிறார். அவர் அதிமுக தலைவர்களை சந்திப்பாரா, கூட்டணி குறித்து அப்போது தெளிவு பிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.