அரசியலில் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரி வரும் 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். தனிக்கட்சி தொடங்குவது குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ள நிலையில், தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சிகளும் தேர்தல் பணியைத் தொடங்கி விட்டாலும் பல குழப்பங்களும் நீடித்து வருகின்றன. அதாவது, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிமுகவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றன. பாஜகவும் 60 சீட், ஆட்சியில் பங்கு என்று பல விஷயங்களில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரசுக்கு வெறும் 10 தொகுதிகள் மட்டுமே கொடுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதனால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் கட்சி, கமலின் மக்கள்நீதிமய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தனி அணி அமைக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
இந்த சூழ்நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த மு.க.அழகிரி தற்போது களத்தில் குதிக்கவுள்ளார். வரும் 20ம் தேதியன்று மதுரையில் தனது ஆதரவாளர்களிடம் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது புதிய கட்சி தொடங்குவது குறித்தும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் சேருவது குறித்தும் தனது ஆதரவாளர்களிடம் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர், திமுகவில் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளதாக கூறி வந்துள்ளார். மேலும், அவர் ரஜினியுடன் ரகசியத் தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு ரஜினிக்கு அவர் வாழ்த்து தெரிவித்து, அரசியல் சூழல் குறித்து பேசியதாக தெரிகிறது.
வரும் 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னைக்கு வருகிறார். பாஜகவின் தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சியினரிடம் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கிறார். இந்த சூழ்நிலையில், அழகிரி தனியாக ஆலோசனை நடத்துவதால், பாஜகவின் மெகா அணியில் அவரும் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது திமுகவினரிடையே கலக்கத்தை அளித்துள்ளது.