பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் தனியார் வங்கியின் போலி கிளையை ஆரம்பித்து மக்களை ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தின் முலாயம் நகரில் வினோத் குமார் கம்ளே என்ற நபர் சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்நாடக வங்கியின் கிளை மேல் அதிகாரி என்று கூறியுள்ளார். பின்பு, இந்த பகுதியில் கூடிய விரைவில் கர்நாடக வங்கியின் மற்றொரு கிளை ஒன்றும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதே பகுதியில் வங்கி கிளை செயல்படுவதற்கு இடத்தையும் தேர்வு செய்து அங்கு அந்த கிளையில் வேலை பார்ப்பதற்கு படித்த இளைஞர்கள் 5 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். சிலர், 10 லட்சம் ரூபாய் வரையிலும், நிரந்தர கணக்குத்தொகையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர், டில்லி கர்நாடக வங்கிக்கு தகவல் கால் செய்து வினோத் குமார் கம்ளே பற்றி விசாரித்துள்ளார். அப்போது, அவர்கள் இப்படி ஒரு பெயர் கொண்ட அதிகாரி தங்கள் வங்கியில் இல்லை என்றும், முகலாயம் நகரில் கர்நாடக வங்கியின் கிளை தொடங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பின்பு, அந்த நபர், கம்ளே குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணைக்கு வந்த போது கம்ளே அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க பதில் சொல்லாமல் தொடர்ந்து தவறான தகவலை அடுத்த வந்த நிலையில் விசாரணையில், கம்ளே தான் போலி வங்கி அதிகாரி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் அதிகளவில் பணத்தை டெபாசிட் செய்த பின்பு, அந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு தப்பித்து செல்லவும் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து வினோத் குமார் கம்ளேவை காவல் துறையினர் கைது செய்தனர்.