பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞர்களின் ஆபாசமான கேள்விகளால், பாதிக்கப்பட்ட நடிகை கதறி அழுத போதிலும் பெண் நீதிபதி அதை கண்டுகொள்ளவில்லை என்று கேரள உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று ஒரு பெண் நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகையும், அரசுத் தரப்பு வழக்கறிஞரும் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றத்தை மாற்றி வேறு நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணையை இன்று (16ம் தேதி) வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த மனு தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது: பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று தான் ஒரு பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையின் தொடக்கம் முதலே விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. எதிர்த் தரப்புக்கு சாதகமாகவே பல முடிவுகளையும் நீதிபதி எடுத்து வருகிறார். பெண் நீதிபதியாக இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட நடிகையின் மனநிலையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. குறுக்கு விசாரணையின் போது நடிகையை அவமானப்படுத்தும் வகையில் ஆபாசமாகவும், மிக மோசமாகவும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கேள்விகளை கேட்டனர்.
ஆனால் அதைத் தடுக்க நீதிபதி எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை. இது தொடர்பாக அரசுத் தரப்பு சார்பில் நீதிபதியிடம் புகார் தெரிவித்தபோதும் அதை அவர் கண்டு கொள்ளவில்லை. எதிர் தரப்பு வழக்கறிஞர்களின் நடவடிக்கையால் பலமுறை நீதிமன்றத்தில் வைத்து அந்த நடிகை கதறி அழுதுள்ளார். ஆனால் அதை நீதிபதி கண்டுகொள்ளவில்லை. இதே நிலை தொடர்ந்தால் வழக்கு விசாரணை ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்படும். விசாரணை நீதிமன்றத்தின் மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது. எனவே விசாரணை நீதிமன்றத்தை கண்டிப்பாக மாற்றியே தீர வேண்டும். வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்றினால் பெண் நீதிபதியைத் தான் நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவ்வாறு அரசு வழக்கறிஞர் கூறினார். வாதத்தைக் கேட்ட பின்னர், தற்போது விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்று இந்த மனு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.