டெல்லியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஜெய்ஷே முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் பிடிபட்டனர். இவர்கள் டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி, மும்பை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உளவுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களாக டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை உள்பட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள காலேக்கான் பகுதியில் 2 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக டெல்லி சிறப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அப்பகுதியில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 பேர் பிடிபட்டனர்.விசாரணையில் அவர்கள் இருவரும் ஜெய்ஷே முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனத் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இருவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களது பெயர் அப்துல் லத்தீப் (21) மற்றும் அஷ்ரப் காதனா (20) என்றும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து சக்தி வாய்ந்த 2 தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் இருவரும் நேற்று இரவு டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்றும், அதைக் கடைசி நேரத்தில் தாங்கள் முறியடித்து விட்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.