மத்திய பிரதேசத்தில் 1999 ஆம் ஆண்டு மனீஷ் மிஸ்ரா என்ற இளைஞர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிக்குச் சேர்த்தார். மனீஷ் மிஸ்ரா, சிறந்த தடகள வீரராகவும் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவராகவும் விளங்கி இருக்கிறார். இதனால் சில என்கவுன்ட்டர்களை தங்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளார். இதற்கிடையே, மனீஷ் மிஸ்ரா, 2005ஆம் ஆண்டு கடைசியாக தாட்டியா மாவட்டத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போதில் இருந்து மனீஷ் மிஸ்ராவை பற்றி எந்த தகவலும் இல்லை. ஆம், கடந்த 15 ஆண்களுக்காக அவரை காணவில்லை.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி குவாலியர் நகரில், நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரத்னேஷ் சிங், விஜய் சிங் பதோரியா என்ற இரு காவலர்கள் இரவில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு அழுக்கு நிறைந்த தோற்றத்தில், நீண்ட முடி, தாடியுடன் ஒரு பிச்சைக்காரர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க, அதை பார்த்த கண்காணிப்பாளர்கள் இருவரும் அவரிடம் சென்று தங்களின் ஜாக்கெட் மற்றும் காலணியை கொடுத்து உதவியுள்ளனர். பிறகு அங்கிருந்து செல்லும்போது காவல் துறையினரின் பெயரை சரியாக அழைத்து அவர்களுக்கு அதிர்ச்சிகொடுத்துள்ளார். தங்கள் பெயர் எப்படி தெரியும் என்ற விசாரணை நடத்தியபோது தான், அது 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மனீஷ் என்பதும், அவருடன் இந்த இரு காவலர்களும் பணிபுரிந்ததும் தெரியவந்துள்ளது.
உடனடியாக மனீஷை மீட்ட காவலர்கள் இருவரும் அவரின் தோற்றத்தை மாற்றி அவரை ஆதரவற்றோர் தங்குமிடத்தில் சேர்த்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மனீஷ், தாட்டியா மாவட்டத்தில் பணிபுரியும்போது அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படவே, அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர். ஆனால் வீட்டை விட்டு மனீஷ் வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறி அவர் 15 ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தான் அவர் கிடைத்துள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.