பாலம் கட்டியதில் ஊழல் முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் வைத்து அதிரடி கைது

by Nishanth, Nov 18, 2020, 12:42 PM IST

கேரள மாநிலம் கொச்சியில் பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட புகாரில் உம்மன் சாண்டி அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ இப்ராகிம் குஞ்சுவை மருத்துவமனையில் வைத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாகக் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கடந்த 2011-16 காலகட்டத்தில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மந்திரிசபையில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் இப்ராகிம் குஞ்சு.

இவர் தற்போது எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது கொச்சியில் பாலாரிவட்டம் என்ற இடத்தில் ₹ 39 கோடி செலவில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே கடுமையாகச் சேதமடைந்தது. வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் அதிர்வுகள் ஏற்பட்டன.

இதையடுத்து பின்னர் வந்த பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் பாலம் கட்டியதில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான அளவுக்கு சிமெண்ட் சேர்க்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.இதையடுத்து முன்னாள் அமைச்சர் இப்ராகிம் குஞ்சு, முன்னாள் பொதுப்பணித் துறை செயலாளர் சூரஜ் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இப்ராகிம் குஞ்சு தவிர அனைவரும் கைது செய்யப்பட்டனர். இப்ராகிம் கைது செய்யப்படாததற்கு பாஜக உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 முறை விசாரணை நடத்தினர். அப்போதே அவர் கைது செய்யப்படலாம் எனப் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போலீசார் அவரை கைது செய்யவில்லை. இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு டிஎஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள இப்ராகிம் குஞ்சுவின் வீட்டுக்கு அதிரடியாகச் சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை என்று அவரது மனைவி கூறினார். ஆனால் அதை போலீசார் நம்பவில்லை. தொடர்ந்து பெண் போலீஸ் உதவியுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இப்ராகிம் குஞ்சு வீட்டில் இல்லை எனத் தெரியவந்தது. விசாரணையில் அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மருத்துவமனையில் உரிய பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அவரை போலீசார் கொண்டு செல்வார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யத் திட்டமிட்டு இருப்பதாக இப்ராகிம் குஞ்சுவுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தான் கைதை தவிர்ப்பதற்காக அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் தான் போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை மருத்துவமனையில் வைத்தே கைது செய்தனர்.

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டது காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே தங்கக் கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டது மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிபிஎம் முன்னாள் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் கைது செய்யப்பட்டது உட்பட விவகாரங்களில் இருந்து திசை திருப்பவே அரசு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் காங்கிரஸ் கூறியுள்ளது.

You'r reading பாலம் கட்டியதில் ஊழல் முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் வைத்து அதிரடி கைது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை