சொத்து வழக்கில் ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா செலுத்தினார்.. விரைவில் விடுதலையாகிறார்..

by எஸ். எம். கணபதி, Nov 18, 2020, 12:36 PM IST

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சொத்து வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி 10 லட்சம் அபராதத்தைச் செலுத்தியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் விடுதலையாக உள்ளார்.வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2வது குற்றவாளியாகத் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார்.

சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது.
இதன்பின், ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பதவி விலகினார். மறுநாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராக தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பத்து, பன்னிரெண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்தனர். அவர்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

திடீர் திருப்பமாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனாலும், சசிகலா அசரவில்லை. அவர் தனக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்தார். அதை கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலில் விழுந்து வணங்கிய காட்சி, வாட்ஸ்அப்பில் உலா வந்து கொண்டே இருக்கிறது.
சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் தண்டனை குறைப்பு செய்தால், அவர் ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது நடக்கவில்லை. அதே சமயம், தண்டனைக் குறைப்பு இல்லாவிட்டாலும் அவர் டிசம்பருக்குள் வெளியே வந்து விடுவார் என்று பேசப்பட்டது.

எனினும், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம்தான் முடிகிறது. இதற்கிடையே தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் அளித்த பதிலில் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாகவும், அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்றால் அது மேலும் தாமதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை(டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை ஓரிரு நாளில் செலுத்தப்படும் என்று தெரிகிறது.

இதையடுத்து, சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளது. அனேகமாக அவர் டிசம்பர் கடைசியில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகளுக்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சசிகலா கலந்து கொள்வார் என்றும் சசிகலாவின் வருகையால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்றும் பேசப்படுகிறது.

You'r reading சொத்து வழக்கில் ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா செலுத்தினார்.. விரைவில் விடுதலையாகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை