இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் பரபரப்பு அடுத்தது என்ன? தலைவர்கள் ஆலோசனை

by Nishanth, Nov 18, 2020, 13:46 PM IST

கேரளாவில் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இந்த கட்சியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கேரள அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே. எம். மாணி. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர், பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகளால் விலகி கடந்த 40 வருடங்களுக்கு முன் கேரளா காங்கிரஸ் (எம்) என்ற பெயரில் ஒரு தனிக்கட்சியைத் தொடங்கினார்.

இக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்து. காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய போதிலும் இவர் கடந்த பல வருடங்களாக காங்கிரஸ் கூட்டணியில் தான் செயல்பட்டு வந்தார். கேரள அரசியலில் இவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இவரது சொந்த தொகுதி கோட்டயம் மாவட்டம் பாலா ஆகும். இந்த தொகுதியில் தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக எம்எல்ஏவாக இருந்து இவர் சாதனை படைத்துள்ளார்.

இதுதவிர நீண்டகாலம் நிதித்துறை அமைச்சராக இருந்தது, இந்தியாவிலேயே அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தது என்று பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இந்நிலையில் கடந்த உம்மன் சாண்டி அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்தபோது மது பார்களுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்காகக் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து அமைச்சர் மாணி பதவி விலகக் கோரி அப்போது சிபிஎம் தலைமையில் எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபையில் அமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது கம்யூனிஸ்ட் தலைமையில் எதிர்க்கட்சியினர் சட்டசபையில் வரலாறு காணாத ரகளையில் ஈடுபட்டனர்.

சட்டசபையில் இருந்த மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் உள்படப் பொருட்களை எதிர்க்கட்சியினர் தூக்கிப் போட்டு உடைத்துச் சேதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது அமைச்சர்களாக உள்ள 2 பேர் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எம். மாணியின் கட்சியில் இவரது மகன் ஜோஸ் கே. மணி மற்றும் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி. ஜே. ஜோசப் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் உள்ளன. ஜோசப் இக்கட்சியின் செயல் தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் கே.எம். மாணி மரணமடைந்தார். இதன்பிறகு கட்சியில் கோஷ்டிப் பூசல் வெடித்தது. இதற்கிடையே கே. எம். மணி மரணமடைந்ததைத் தொடர்ந்து பாலா தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. ஆனால் கட்சியில் கடும் கோஷ்டிப் பூசல் நடந்ததால் அப்போது இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இக்கட்சிக்கு அன்னாசிப்பழம் சின்னம் கிடைத்தது. ஆனால் அந்த தேர்தலில் 50 வருடங்களுக்குப் பின்னர் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி தோல்வியடைந்தது.இந்நிலையில் சமீபத்தில் கே.எம். மாணியின் மகன் ஜோஸ் கே.மாணி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி இடது முன்னணியில் சேர்ந்தார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இவரது அணியைச் சேர்ந்தவர்கள் இடது முன்னணி சார்பில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர். இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி ஜோஸ் கே.மாணி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு கொடுத்தார். ஆனால் இதற்கு பி.ஜே.ஜோசப் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஜோஸ் கே. மாணிக்கு மின்விசிறி சின்னமும், பி.ஜே. ஜோசப் அணிக்கு செண்டைமேளம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக இவர்கள் இருவரும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை