மருத்துவ ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்.. முறைகேடுகளுக்கு திமுக கண்டனம்..

by எஸ். எம். கணபதி, Nov 18, 2020, 13:39 PM IST

மருத்துவ ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் கனவு ஒவ்வொரு ஆண்டும் சிதைக்கப்பட்டு வருகிறது. இதனால் 13 மாணவர்கள் இதுவரை தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. ஆட்சியின் ஆசிகளுடன் நடக்கும் நீட் முறைகேடுகள் இன்னொரு பக்கம் மாணவர்களின் இதயத்தில் வேதனைத் தீயைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.

2020-21-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு பட்டியலில், முதல் 10 மாணவர்களில் 2ம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5ம் இடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியல் முறைகேடுகளும், முரண்பாடுகளும் இன்னும் தொடர்கிறது.நீட் தேர்வுக்குத் தகுதியானவர்கள், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் கூறி வந்தாலும் - 2017ல் எடப்பாடி ஆட்சியில், நீட் தேர்வை அனுமதித்ததிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்விலும், அந்த நீட் தேர்வின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு தயாரிக்கும் ரேங்க் பட்டியலிலும், முறைகேடுகளும், மோசடிகளும் தடையின்றித் தொடர்கின்றன.

நீட் தேர்வையே ஆள்மாறாட்டம் செய்து எழுதினார்கள்; அப்படி எழுதியவர்களில் சிலர் ஆதார் எண் இருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆள்மாறாட்ட மோசடியையே கைகழுவி விட்டது அ.தி.மு.க. ஆட்சி.நீட் தேர்வில் வேறு மாநிலத்தவர், போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து இங்கும் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியிலேதான். நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவியரை, காதில் இருக்கும் தோட்டைக் கழற்று, காலில் இருக்கும் கொலுசைக் கழற்று என்று நிந்தனை செய்யப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். நீட் முறைகேடுகள் படலம் இந்த ஆண்டும் தொடருவதாகச் செய்திகள் வெளிவந்திருப்பது; அ.தி.மு.க. ஆட்சியும், அதன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் “குட்கா ஊழல், குவாரி ஊழல், ஆர்.கே.நகர் ஊழல், கொரோனா ஊழல்” ஆகியவற்றிற்கு மட்டுமே லாயக்கு; ஒளிவுமறைவின்றி – வெளிப்படையாக - முறைகேடுகளின்றி மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு அறவே லாயக்கில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

ஒரே மாணவர் எப்படி இரு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்?. அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்? தெலங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் எப்படி இடம் பெற்றார்கள்? அப்படி இடம்பெற்றவர்கள் எப்படி தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்கள்? இதற்கு உரிய விடையோ விளக்கமோ அளிக்காமல்; மைக்கைப் பிடித்து, ஒவ்வொரு நாளும் பேட்டி என்ற பெயரில், வரிசை வரிசையாய் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டால் போதும்- மக்கள் நம்பி விடுவார்கள் என்று அமைச்சரும்- அவருக்கு வக்காலத்து வாங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மனப்பால் குடிப்பது, அருவருக்கத்தக்கதும், அவமானகரமானதுமான செயல்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கல்வியில் சேருவதற்கான நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும். வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமாதிரி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் யார் யார், அப்படிக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்த அமைச்சர்கள் யார் யார், பரிந்துரைக்குப் பெற்ற பரிசு என்ன என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமளித்து, கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்த கதையாக மாறிவிடக் கூடாது என்றும்; இது கமிஷன் வாங்கிக் கொண்டு விடப்படும் டெண்டர்கள் அல்ல - மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோரின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் என்பதை முதலமைச்சர் பழனிசாமி கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading மருத்துவ ரேங்க் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள்.. முறைகேடுகளுக்கு திமுக கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை