காஷ்மீரில் என்கவுன்டர்.. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

by எஸ். எம். கணபதி, Nov 19, 2020, 09:21 AM IST

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஆனாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் தொடர்ந்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். அவர்களை ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து ஊடுருவலைத் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் பான் சுங்கச் சாவடி அருகே இன்று(நவ.19) அதிகாலையில் ஒரு வாகனத்தில் வந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீவிரவாதிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், போலீசாருடன் ராணுவத்தினரும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டர் காரணமாக ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

You'r reading காஷ்மீரில் என்கவுன்டர்.. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை