பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகை சார்பிலும், அரசுத் தரப்பு சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகை மற்றும் அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நாளை வரை விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவில் நாளை தீர்ப்பளிப்பதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கிடையே இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியான விபின்லால் என்பவரை ஒருவர் மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விபின்லால் காசர்கோடு மாவட்டம் பேக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் விபின்லாலை மிரட்டியது கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவான கணேஷ் குமாரின் அலுவலக செயலாளர் பிரதீப் குமார் என தெரியவந்தது. இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வாக்குமூலம் அளித்தால் வீடு கட்டுவதற்கு பண உதவி செய்வதாக விபின்லாலிடம் பிரதீப் குமார் கூறியுள்ளார். வாக்குமூலம் அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பிரதீப் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இன்று அவர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக கூறி நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதையடுத்து பிரதீப்குமார் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கண்டிப்பாக போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க பிரதீப் குமாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று பிரதீப்குமார் காசர்கோடு டிஎஸ்பி அலுவலத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரை போலீசார் விடுவித்தனர்.