காஞ்சிபுரத்தைச சேர்ந்த கந்தசாமி என்பவா் கடந்த 1998-ம் ஆண்டு பிறந்தார். பிறக்கும் போதே அவருக்கு கல்லீரல் செயலிழப்பு, அதாவது பிலியரி அட்ரேசியா என்ற குறைபாடு இருந்துள்ளது. இது பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவித குறைபாட்டு நோயாகும். கல்லீரலில் இருந்து பித்தப்பைக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுகிறது. இதனால் அவதிப்பட்ட நிலையில் 20 மாத குழந்தையாக இருக்கும்போது மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
இந்தியாவில் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்த குழந்தை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சிகிச்சை மேற்கொண்ட இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த கல்லீரல் நிபுணரான டாக்டர் அனுபம் சிபல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் நீண்டகாலமாக உயிர்வாழ்வதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம் எனக் கூறியுள்ளாா்.
இதற்கிடையே, இந்த அறுவை சிகிச்சை நடந்து 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதே கந்தசாமி, தனக்கு அறுவை சிகிச்சை நடந்த அதே மருத்துவமனையின் மருத்துவராக பணியில் சேர இருக்கிறார். மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஏ.எஸ். சோயின் கந்தசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது அவருக்கு இரண்டு வயது கூட இல்லை என்றும் அவர் அப்பொழுது மிக மோசமான நிலையில் இருந்தாா் எனவும் கூறினாா்.தொடர்ந்து பேசுகையில் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருந்தார் என்றும் ஐ.சி.யுவிலிருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வர மருத்துவர்கள் போராடியது என் நினைவில் உள்ளது என"கூறியுள்ளாா்.மேலும் இவர் குருக்ராம், மெடந்தா மருத்துவ நிறுவனத்தின் தலைவராவர்.
இது குறித்து கந்தசாமி, ``நான் இன்று உயிருடன் இருப்பதற்கு மருத்துவர்கள் தான் காரணம். உயிர்களை காப்பாற்றும் உன்னதமான மருத்துவத்தொழிலை தானும் செய்ய விரும்பி, அந்தக் கனவை நனவாக்கியுள்ளேன். முதலில் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது தன் சிறுவயது கனவு. பின்பு குழந்தை மருத்துவத்தில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. அதனால் பச்சிளங்குழந்தை மருத்துவத்தை தேர்ந்தெடுத்து படித்ததாகவும் அடுத்த வருடம் மருத்துவராகவுள்ளேன் எனவும் இது மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமையும்" எனவும் பெருமிதம் கொள்கிறார்.