செல்ஃபி எடுக்க விரும்பாதோர் யாருமில்லை என்று கூறிவிடுமளவுக்கு அனைவருக்கு செல்ஃபி எடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. எந்த இடத்துக்குச் சென்றாலும், நண்பரை, பிரபலத்தை காண நேரிட்டாலும் அங்கே அல்லது அவர்களுடன் செல்ஃபி எடுத்து உடனே ஸ்டேட்ஸாக (நிலைத்தகவல்) வைத்துக் கொள்கிறோம்; ஃபேஸ்புக்கில் பகிர்கிறோம். செல்ஃபி எடுப்பதற்கு ஸ்மார்ட்போன் வேண்டும். இனி செல்ஃபி எடுக்க ஸ்மார்ட்போன் வேண்டாம்.
செல்ஃபி எடுப்பதற்காக ஸ்மார்ட் ரிங் என்னும் மோதிரத்திற்கான காப்புரிமையை அமெரிக்காவில் கூகுள் நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் (United States Patent and Trademark Office - USPTO)இதற்கென கடந்த ஆண்டு மே மாதம் கூகுள் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த மாதம் 10ம் தேதி அது வெளியிடப்பட்டுள்ளது.
விரலில் அணியக்கூடிய இதில் செல்ஃபி எடுக்கக்கூடிய காமிரா இருக்கும். அதனுடன் எடுத்த படத்தை அனுப்பவும், காட்சிப்படுத்தவும் இன்னொரு சாதனம் (HUD) இருக்கும். இந்த ஸ்மார்ட் ரிங், வயர் அல்லது வைஃபை, வைமேக்ஸ், புளூடூத் உள்ளிட்டவற்றின் உதவியால் இதை இணைக்கலாம். இந்த ஸ்மார்ட் ரிங்கில் ஒரு பிராசஸர், உள்ளீடு செய்யக்கூடிய சாதனம், ஆப்டிக்கல் சென்ஸார், டிரான்ஸ்மிட்டர், மின்கலம், இன்டிகேட்டர் உள்ளிட்டவை இருக்கும்.