இதுவரை 3,356 பேர் மரணம் கேரளாவில் கொரோனா மரணங்களை குறைத்து காண்பிப்பதாக பிபிசி பரபரப்பு தகவல்

by Nishanth, Nov 21, 2020, 19:29 PM IST

கேரளாவில் கொரோனா நோய் பாதித்து மரணமடைபவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாக பிபிசி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் கேரள அரசின் கணக்கில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலுள்ள வுஹானில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த 3 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரவியது. வுஹானிலிருந்து கேரளா திரும்பிய இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 3 பேருக்கும் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலனாக அவர்கள் உடல்நலம் தேறினர். இதன் பிறகு வேறு யாருக்கும் நோய் பரவாமல் இருந்தது. ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய ஒரு குடும்பத்தினர் மூலம் கேரளாவில் இரண்டாவது கட்டமாக நோய் பரவ தொடங்கியது. இதன் பிறகு கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும் தொடக்கத்தில் கேரளாவில் நோய் பரவல் கட்டுக்குள் தான் இருந்தது. பல்வேறு உலக நாடுகளும் கேரளாவின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியது. ஆனால் தற்போது மற்ற மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதேபோல தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 10 அல்லது 15 பேர் தான் மரணமடைந்தனர். ஆனால் தற்போது மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகச் சராசரியாகத் தினமும் 25க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதித்து இறக்கின்றனர். இன்றும் 25 பேர் மரணமடைந்தனர்.

இதையடுத்து மரண எண்ணிக்கை 2,022 ஆக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கேரளா உண்மையான மரண எண்ணிக்கையை வெளியிடவில்லை என்று பிபிசி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை கேரளாவில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் அன்று வரை கேரளாவில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது என்றும் பிபிசி கூறுகிறது. டாக்டர் அருண் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை