சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றும், இன்றும் 4,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக தினமும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேற்றும், இன்றும் 2 நாளில் 4,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் கோவில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது.
கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் கேரள சுகாதாரத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே சபரிமலை செல்லும் பக்தர்களை பரிசோதிப்பதற்காக சபரிமலையில் 500க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் சுகாதாரத் துறையினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே கேரளா முழுவதும் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் சுகாதாரத் துறை ஊழியர்கள் பெரும்பாலானோர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் ஊழியர்கள் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதால் சபரிமலையில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க முடியாது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கா விட்டால் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் நிலைமை மோசமாகி விடும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவசம் போர்டு தலைவர் வாசு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விரைவில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இதனால் இன்னும் ஒருசில தினங்களில் பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே நடை திறந்த பின்னர் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.