வன விலங்குகளால் ஆபத்து சபரிமலையில் பக்தர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு

by Nishanth, Nov 23, 2020, 11:08 AM IST

சபரிமலையில் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து அதிகாலையிலும், இரவிலும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக வனத்துறையினரும் உடன் செல்கின்றனர்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு யானைகள், புலிகள் உட்பட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன.

சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் போது இந்த வனவிலங்குகள் உள் வனப்பகுதிக்குள் சென்று விடும். கோவில் மூடப்பட்டு இருக்கும் நாட்களில் பக்தர்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் வனவிலங்குகள் சபரிமலையில் சுதந்திரமாக நடமாடும். சிலசமயங்களில் கோவில் அருகே கூட புலிகள் உள்பட வனவிலங்குகள் வந்த சம்பவங்கள் உண்டு. கோவில் நடை திறந்திருக்கும் சமயங்களில் கூட யானைகள் உட்பட விலங்குகள் நடமாட்டம் இருப்பதுண்டு.

பலமுறை யானைகளைக் கண்டு பக்தர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனாலும் இதுவரை சபரிமலையில் வன விலங்குகளால் பக்தர்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த ஆபத்தும் ஏற்பட்டது கிடையாது.இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக மண்டலக் காலத்தில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினசரி 1,000 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலையில் வழக்கமாக வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்கள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தங்குவது உண்டு. இரவில் தரிசனம் கிடைக்காவிட்டால் சன்னிதானத்தில் தங்கியிருந்து மறுநாள் காலையில் தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் செல்வார்கள். ஆனால் இந்த வருடம் பம்பையிலும், சன்னிதானத்திலும் பக்தர்கள் தங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் சபரிமலை கோவில் வரலாற்றில் இல்லாத இதுவரை இல்லாத வகையில் மண்டலக் காலத்தில் சபரிமலை கோவில் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இந்நிலையில் பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் சபரிமலையில் பக்தர்கள் செல்லும் பாதையில் விலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு வன விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கேரள வனத்துறை தீர்மானித்துள்ளது. தற்போது தினமும் அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது. இதனால் தினமும் அதிகாலை 3 மணி முதல் தான் பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகாலை நேரத்தில் பக்தர்கள் மிகக்குறைவாக இருப்பார்கள் என்பதாலும் செல்லும் வழியில் வனவிலங்குகள் வர வாய்ப்பு இருப்பதாலும் அந்த சமயத்தில் செல்லும் பக்தர்களுடன் வனத்துறையினரும் பாதுகாப்பாகச் செல்கின்றனர். மேலும் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னர் பம்பைக்குத் திரும்பிச் செல்லும் பக்தர்களுக்கும் வனத்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

You'r reading வன விலங்குகளால் ஆபத்து சபரிமலையில் பக்தர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை