கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் வீட்டிலிருந்தபடியே ஓட்டு போடலாம்

by Nishanth, Nov 23, 2020, 12:19 PM IST

கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் வீடுகள் அல்லது மருத்துவமனைகளில் இருந்தபடியே ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்து, மனுக்கள் பரிசீலனையும் முடிந்துவிட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி நேற்றாகும். இதுவரை 1,68,028 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த கோரிக்கையை கேரள மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்தது.

இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களுக்கு தபால் ஓட்டு போட வாய்ப்பளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பே இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அதன் பின்னர் நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களுக்கு ஓட்டு போட முடியாத நிலை இருந்தது. பின்னர் அவர்களுக்கும் ஓட்டுபோட வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தேர்தலுக்கு 3 நாட்களுக்குள் நோய் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் தேர்தல் நாளன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று ஓட்டு போடலாம். அப்போது அவர்கள் பாதுகாப்பு கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

இந்நிலையில் தபால் ஓட்டுகளை எப்படி போட வேண்டும் என்ற விவரங்களை கேரள மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறையினர் சேகரித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிப்பார்கள். அந்த விவரங்களை மாவட்ட கலெக்டர் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். இதன்படி தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை 3 மணி வரை வீடுகள் அல்லது மருத்துவமனையில் எங்கு நோயாளிகள் இருக்கிறார்களோ அங்கு சென்று தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்கள் கொடுப்பார்கள். வாக்காளர்கள் ஓட்டு போட்டு விட்டு அதை அதிகாரியிடமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கலாம். இதை தேர்தல் அதிகாரிகள் வீடியோ மூலம் பதிவு செய்வார்கள்.

You'r reading கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் வீட்டிலிருந்தபடியே ஓட்டு போடலாம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை