ஒரு கிராமத்தில் ஒருவர் தவிர அனைவருக்கும் கொரோனா அந்த நபர் மட்டும் தப்பித்தது எப்படி?

by Nishanth, Nov 23, 2020, 17:01 PM IST

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் 42 பேரில் 41 இருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 52 வயதான ஒருவர் மட்டும் நோய்ப் பாதிப்பிலிருந்து தப்பினார். முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தான் தனக்கு கொரோனா பரவவில்லை என்று அந்த நபர் கூறுகிறார்.இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் லாஹோல் ஸ்பிதி என்ற மாவட்டம் உள்ளது.

இந்த மாவட்டத்தின் கடைக்கோடியில் தொராங்க் என்ற குக்கிராமம் உள்ளது. மிகக் குளிர் பிரதேசமான இந்த கிராமத்தில் மொத்த மக்கள் தொகையே 160 மட்டும் தான். கடும் குளிர் காலங்களில் இந்த கிராமத்தைச் சேர்ந்த வயதானவர்கள், நோயாளிகள் உட்பட்டோர் வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விடுவார்கள். குளிர்காலம் கடந்து கோடைக்காலம் வரும்போது தான் அவர்கள் தங்களது சொந்த கிராமத்திற்குத் திரும்புவார்கள்.

தற்போது கடும் குளிர் காலம் என்பதால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். கடைசியாக 42 பேர் மட்டுமே இங்கு வசித்து வருகின்றனர். தற்போது இந்த கிராமத்தில் வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கும் குறைந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி இந்த கிராமத்தில் எஞ்சியுள்ள 42 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 41 பேருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான பூஷன் தாகூர் என்பவருக்கு மட்டும் நோய் பரவவில்லை.அவர் மட்டும் நோயிலிருந்து தப்பியது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தனக்கு மட்டும் நோய் ஏன் பரவவில்லை என்று பூஷன் தாகூர் கூறியது: முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது தான் எனக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

வீட்டில் இருக்கும்போது கூட முக கவசத்தை அணிந்து கொள்வேன். பொது இடங்களுக்குச் செல்லும் போது சமூக விலகலைக் கடைப்பிடிப்பேன். கையில் எப்போதும் சானிடைசர் இருக்கும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வேன். எனக்குத் தேவையான சாப்பாட்டை நானே சொந்தமாகத் தயாரித்துக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். இவரது குடும்பத்தில் மொத்தம் பூஷன் உள்பட 7 பேர் உள்ளனர். இவர்களில் 6 பேருக்கும் நோய் பரவி உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் உள்ளனர். பூஷன் வீட்டில் தனி அறையில் வசித்து வருகிறார். அந்த கிராமத்தில் தற்போது உள்ள கடும் குளிர் தான் நோய் பரவலுக்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமில்லாமல் குளிர் அதிகரிக்கும் போது கிராமத்தினர் ஒன்றாகச் சேர்ந்து தீ காய்வது உண்டு.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த கிராமத்தில் ஒரு விழா நடந்தது. அந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டனர். இதுவும் நோய் பரவலுக்குக் காரணமாக அமைந்தது என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

You'r reading ஒரு கிராமத்தில் ஒருவர் தவிர அனைவருக்கும் கொரோனா அந்த நபர் மட்டும் தப்பித்தது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை