கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட போதிலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அசாம் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கொகோய் (86) சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். கடந்த 1968ல் அசாமில் உள்ள ஜோர்ஹத் நகரசபை கவுன்சிலராக தருண் கொகோய் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1971ல் இவர் எம்பி ஆனார். 1976ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணை செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், 1986 மற்றும் 96ல் அசாம் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனார். 1997ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இவர் மார்கரிட்டா தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இதன் பின்னர் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிட்டபர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல் இவர் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.
2001 முதல் 2016 வரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்து அசாம் மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். ஆனால் 2014ல் நடந்த தேர்தலில் இவர் பாஜகவிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 25ம் தேதி தருண் கொகோய்க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கவுகாத்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாத தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கடந்த மாத இறுதியில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மீண்டும் கவுகாத்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே தருண் கொகோயை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் உடல் நிலை மோசமானதால் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை தருண் கொகோய் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.