பரஸ்பர சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம் என்றும், சுகாதார ஆய்வாளர் தன்னை பலாத்காரம் செய்யவில்லை என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாகக் கூறி தன்னை வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறிய இளம்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருவனந்தபுரம் நீதிமன்றம் சுகாதார ஆய்வாளருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவனந்தபுரம் அருகே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாகக் கூறி ஒரு இளம்பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து இரவு முழுவதும் கட்டிலில் கட்டிப்போட்டு சுகாதார ஆய்வாளர் ஒருவர் பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவனந்தபுரம் பாங்கோடு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து பிரதீப் குமார் (44) என்ற சுகாதார ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா என்ற இடத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் ஜூனியர் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட இவர், 2 முறை ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் 2 முறையும் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் 3வது முறையாக பிரதீப் குமார் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட இளம்பெண் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பது: நானும், சுகாதார ஆய்வாளர் பிரதீப் குமாரும் பரஸ்பர சம்மதத்துடன் தான் உறவு கொண்டோம். உறவினர்கள் வற்புறுத்தியதால் தான் அவர் மீது பலாத்கார புகார் கொடுத்தேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யக் கேரள டிஜிபிக்கு உத்தரவிட்டது. இளம் பெண் தாக்கல் செய்த மனுவில் கூறிய தகவல் உண்மையாக இருந்தால் செய்யாத ஒரு குற்றத்திற்காகச் சுகாதார ஆய்வாளர் 77 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இளம்பெண்ணின் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கிறது.
எனவே அதில் உண்மை உள்ளதா என்பது குறித்து போலீசார் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி, பிரதீப் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுகாதார ஆய்வாளரைக் கேரள சுகாதாரத் துறை டிஸ்மிஸ் உத்தரவிட்டுள்ளது.