வயதுக்கு வந்தவர்களின் உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை லவ் ஜிகாத் வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி

by Nishanth, Nov 24, 2020, 14:56 PM IST

வயதுக்கு வந்த ஆண், பெண்ணின் உரிமையில் தலையிடத் தனி நபருக்கோ, அரசுக்கோ, யாருக்கும் அதிகாரம் இல்லை என்று லவ் ஜிகாத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், அரியானா மற்றும் கர்நாடகா உள்பட சில மாநிலங்கள் சட்டம் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் என்று உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

இந்நிலையில் கிழக்கு உத்திர பிரதேச பகுதியில் உள்ள குஷிநகர் என்ற இடத்தை சேர்ந்த சலாமத் அன்சாரி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதையடுத்து பிரியங்காவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்தது: என்னுடைய மகளை சலாமத் அன்சாரி கடத்திச் சென்று என்னுடைய விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துள்ளார்.

மேலும் மகளை மதம் மாற்றி அவரது பெயரை அலியா என்றும் மாற்றியுள்ளார். எனவே அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் சலாமத் அன்சாரி மீது வழக்குப் பதிவு செய்தனர்.இதை எதிர்த்து சலாமத் அன்சாரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் கூறியது: வயதுக்கு வந்தவர்களின் உரிமையில் தனி நபரோ, அரசோ, யாரும் தலையிட அதிகாரம் இல்லை.

சலாமத் அன்சாரியும் பிரியங்காவும் விரும்பி திருமணம் செய்துள்ளனர். அவர்கள் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எதிராகக் கூறப்பட்ட புகாரில் எந்த உண்மையும் இல்லை. பிரியங்காவைக் கடத்திச் சென்று திருமணம் செய்ததாக அவரது தந்தையின் கூறிய புகாரில் உண்மை இல்லை என்று கூறிய நீதிமன்றம், சலாமத் அன்சாரி மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை